ஜிகினா ரைட்டர்ஸ்

Featured

கனவு சுவராஸ்யமானது. கவலைகளை மறந்து கண் அயரும் போது, சில நேரங்களில் ஷங்கர் இயக்கியது போலப் பிரமாண்ட சம்பவங்களும், பல நேரங்களில் ஹரி காட்டுவது போலக் கொலை வெறித் தாக்குதல்களும் மனதில் நிகழும். கனவுக்குக் காரணம் உடல் தூங்கி மனது தூங்காமல் இருப்பதோ? ஆழ் நிலை ஞானத்தை நமக்குத் தெரியப் படுத்தும் அடையாள மொழி தான் கனவு என்று கருதுவாரும் உண்டு. கனவு மனித உடலுக்கு ஓய்வு தருகிறது. மராமத்துச் செய்கிறது. புத்துணர்வு, எழுச்சி அளிக்கிறது என்று அறிவியலார் கருதுகிறார்கள்.

 

எழுத்தாணி

எழுத்தாணி

கனவுகள் வருவது ஏன்?

கனவுகள் பெரும்பாலும் இழப்பீடு போல அமைகிறது. சோகத்தையே சுமந்து திரிபவனுக்குத் திரிஷாவுடன் டேட்டிங் போவது போலக் கனவு வந்தால் எப்படி இருக்கும்? பேரின்பம் தானே. இதற்கு எதிர்மறையாகத் தொட்டதெல்லாம் துலங்கும் நபருக்கு ஷேர் மார்க்கெட்டில் நான்கு கோடிகள் இழப்பது போலக் கனவு வருவதும் இயல்பு என்கிறார் கார்ல் ஜங் என்ற மனவியல் நிபுணர்.

நமது ஆளுமையின் வளர்ச்சி அடையாத குணாதிசயங்கள் தான் நம் கனவில் வெளிப்படுகிறதாம். இதனால் தான் நம் வாழ்வியலுக்கு ஒவ்வாத நிகழ்வுகள் கனவை ஆக்கிரமிக்கின்றன.

எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் ஓபன் ஹார்ட் சர்ஜெரி செய்து கொண்டார். மயக்க நிலையிலிருந்து மெல்ல மெல்ல சுய நினைவு பெறுகிற சமயத்தில் அவர் பல கனவுகளைக் கண்டதாகப்  பகிர்ந்து கொண்டார். அவருக்கு இலக்கியத்திற்கான புக்கர் பரிசு கொடுக்கப் பட்டதாகவும், அவர் புத்தகத்தை எதிர்த்துக் கலாச்சாரக் காவலர்கள் போராட்டம் செய்ததாகவும், புத்தகப் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தியதாகவும், சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிர்வாகத்தினர், மிரட்டி, ‘இனி எழுத மாட்டேன்’ என்று உறுதி வாங்கிக் கொண்டதாகவும், பல நடை முறைக்கு ஒவ்வாத சம்பவங்களாக விவரித்தார். சாகித்ய அகாடமி பரிசு பெறுகிற லெவலுக்கு எழுதும் திறனில்லாத இவருக்கு வந்த கனவுகள் நிச்சயம் அவரின் வாழ்வியல் முறைக்கு எதிரானது தான்.

மன அழுத்தம், அதனால் உண்டாகும் பதட்டம் மற்றும் அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முயற்சியாகவும் கனவுகள் அமையலாம்.

நண்பரொருவரின் நண்பர் அவர். தன் வயதான மகளுக்குத் திருமணம் ஒழுங்கு செய்திருந்தார். கடைசி நேரத்தில் கல்யாணம் தடைபட்டு நின்று விட்டது. பேரதிர்ச்சி. மனக் கிலேசம் அதிகமாகித் தூங்க முடியாமல் தவித்தார். அன்று தீர்வாக அவருக்கு ஒரு கனவு வந்தது. அவர் மகள் ஒர் ஆட்டோ டிரைவருடன் ஓடி விட்டதாக. ஏனிப்படி? மழை அரித்த ரோட்டில் பந்தல் போட குழி தோண்டி குதறியது போல. அப்படி ஒன்றும் நடக்க வில்லை. மகள் வீட்டில் தான் இருந்தாள். ஆனாலும், இந்தக் கனவு எப்படித் தீர்வாகும்? அவர் நேர்மையானவர். அவரது குணாதிசயத்துக்கு நேர்மாறானத் தீர்வாகவே இது தோன்றியிருக்கக் கூடும்.

மனதும் ஞாபகமும் சரிவரச் செயல்படச் சீரான தூக்கம் அவசியம் என்று அறிவியல் ஒத்துக் கொள்கிறது. அதே நேரம் நான்கு மணிநேரத் தூக்கத்தால் ஞாபக ஒருங்கிணைப்பை முற்றிலும் செய்து முடிக்க முடியாது. ஞாபக ஒருங்கிணைப்பு முழுமைப் பெற கனவுகள் அவசியமாகிறது. பெரும்பாலான கனவுகளில் சமீபத்திய நிகழ்வுகள் மையப் பொருளாகிறது. மீன் கடையில் கைகலப்பில் ஈடுபட்டவனுக்குத் திமிங்கலத்தால் விழுங்கப் படப் போவது போலக் கனவு வரலாம். இதற்குக் காரணம், மூளை ஞாபகங்களை ஒழுங்குப் படுத்தி அமைப்புப் படுத்துவதே. கனவுகள் ஒரு வகையில், மூளையை மறுதுவக்கம் செய்வதற்குச் சமமாகும்.

இப்படி நாம் தூங்கும் போதும் மூளை சம்பவங்களை ஒழுங்குப்படுத்தி ஒருங்கிணைப்பதால், பல சமயங்களில் நிகழ்வுலகப் பிரச்சனைகளுக்குக் கனவுகள் தீர்வாகிறது.

சிக்மண்ட் பிராய்ட் கனவுகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘கனவுகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. அது மயக்கநிலை எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளைப் பிரதிபலிக்கிறது.’ என் நண்பர் ஒருவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. இப்போது பேராசிரியராகப் பணி புரிகிறார். அவருக்கு அடிக்கடி, அவர் டாக்டராகி ட்ரீட்மென்ட் கொடுப்பது போலவும் ஆபரேசன் செய்வது போலவும் கனவுகள் வருகிறதாம். டாக்டராக வேண்டுமென்ற அவா எப்போதும் இருந்தது இல்லை. ஆனால் இஃது ஒடுக்கப்பட்ட உணர்வாயிருந்திருக்கலாம். நம்மையறியாமல் ஆழ்மனக் கிடங்கில் அமிழ்ந்து கிடக்கும் எண்ணங்கள் கனவுகளில் மட்டுமே வெளிப்படும்.

ஆகக் கனவுகளை எழுதுபவர்கள் நாமே. ஜிகினா கனவுகளின் ஸ்கிரிப்ட் ரைட்டர் நம் மனம் தான்.

வாருங்கள் நன்றாக வாழ்ந்து சாகலாம்

இரண்டு கேள்விகள் என் மனதில் அடிக்கடி வந்து போகும்.
மனிதர்களை சந்தோசப் படுத்துவது எவை?
சந்தோசத்தைப் பெற மனிதன் என்ன செய்ய வேண்டும்? என் மனதில் அத்தியாவசியமெனப் பட்ட சில தேவைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் தேவை நல்ல உடல் நிலை. உடல் உபாதைகளால் அவதிப் படுபவர்களால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? உடலை ஆக்கிரமிக்கும் ஒவ்வொரு வியாதியும் சந்தோசத்தில் கொஞ்சமாயேனும் ஓட்டை போட்டு விடும்.

இரண்டாவது ஒரு ஆரோக்கியமான வங்கிக் கணக்கு வேண்டும். கோடிகளில் சுவிஸிலோ அல்லது ஹவாய் தீவிலோ உள்ள பாங்கில் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும் என்றில்லை. அது, தேவையான வசதிகளை தரத் தக்கதாய் இருந்தால் போதும். பொழுது போக்க பணம் ஒதுக்க இயல வேண்டும். பொழுது போக்கென்று கிளபில் சீட்டாடுவதையோ பப்பில் மது அருந்துவதையோ சொல்லவில்லை. குடும்பத்தோடு வெளியே சாப்பிடச் செல்லவோ, சினிமா பார்க்கவோ, ஊட்டி கொடைக்கானல் சென்று இளைப்பாறவோ அல்லது வாரக் கடைசியில் பீச் ரெசார்டில் ஓய்ந்திருக்கவோ பணம் வேண்டுமல்லவா… இதற்கெல்லாம் கடன் வாங்கவா முடியும்? பணப் பற்றாக் குறை என்பதை மனச் சிதைவிற்கு வழி வகுக்கும். கடனில் வாழ்வது இயல்பு வாழ்க்கைக்கு உதவாது. நமக்கே நாம் கீழ்த்தரமாகத் தோன்றுவோம். பிறர் நம்மைக் குறைத்து மதிப்பிடுவதே நல்லதல்ல. நம் மனமே நம்மை மட்டம் தட்டினால் என்னவாகும்?

Image
மூன்றாவது ஒரு சொந்த வீடு தேவை. சுவர்க்கத்திலே என்றாலும் வாடகை வீடு ஒரு போதும் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்காது. அந்த வீட்டிலே தோட்டம் அமைக்குமளவு காலி இடம் இருந்தால் சாலச் சிறந்தது. நமக்குப் பிடித்தமான மரங்களையும் பூச் செடிகளையும் நட்டு அது வளர்ந்து பூத்துக் காய்த்துக் குலுங்குவதைப் பார்ப்பதே பேரானந்தம். கூடவே இருப்பவர்களே உறவாகும். மரம் செடிகளுடன் உறவாடுவது அல்லது உறவை பேணுவது கூட மனதுக்கு ரம்மியமானது தான்.

நான்காவது ஒரு நல்ல புரிதல் உள்ள தோழன் அல்லது தோழி தேவை. இங்கே நான் கணவன் அல்லது மனைவி தேவையென்று சொல்வதைத் தவிர்க்கிறேன். கணவன் மனைவி உறவுகள் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளால் அலைக்கழிக்கப் படுகின்றன என்பதே நிதர்சனம். கருத்து வேறுபாடுகள் அல்லது தவறான புரிதல்கள் மன நிம்மதியை களவாடி விடும். நாள்தோறும் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட புரிதலற்ற தோழமையைத் தவிர்ப்பதே சேமம்.

Image

கூடுமானவரை பிறரோடு உங்களை ஒப்பிடு செய்வதை தவிருங்கள். உங்களை விட அதிக செல்வம், புகழ் பெற்று வாழ்க்கையில் உயர்ந்தவர்களைப் பார்த்து பொறாமை கொண்டு பெருமூச்சு விடாதிருங்கள். அது பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி அழுது புலம்புவதற்கு ஒப்பாகும். ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா? பொறாமை என்புருக்கிப் போன்றது. பொறாமை வளர்ச்சிக்கு உதாவாது. ஏனென்றால் அது கடிக்கும் ஆனால் உண்ணாது. (Envy is thin because it bites but never eats – ஸ்பானிஷ் பழமொழி)

பிறர் உன்னை அரட்டைக்குப்  பயன்படுத்திக் கொள்ளாமல் தற்காத்துக் கொள். அவர்கள் பிடியிலிருந்து தப்பும் போது உடல் மற்றும் மனம் சோர்வடைந்துப் போயிருக்கும். மேலும் அடுத்தவரின் தனிப்பட்ட விசயங்களை அறியும் ஆர்வம் கூடியிருக்கும்.

உங்களை முழுமைப்படுத்தும் ஓன்று அல்லது இரண்டு பொழுது போக்குகளைப் பழகிக் கொள்ளுங்கள். அவை தோட்டவேலையோ, வாசித்தலோ, எழுதுவதோ, வர்ணம் தீட்டுவதோ, விளையாடுவதோ, இசை கேட்பதோ எதுவாகவும் இருக்கலாம். ஓசி குடிக்காக சங்கங்களுக்கோ அல்லது கொண்டாட்டங்களுக்கோ செல்வதும் பிரபலங்களை சந்திக்க அலைவதும் கொலை வெறியுடன் நேரத்தை விரயம் செய்வதற்கு சமமாகும். உங்களையும் உங்கள் நேரத்தையும் அர்த்தமுள்ள வகையில் கட்டிப் போடும் செயல்களில் கவனத்தை செலுத்துவது நல்லது பயக்கும்.

Image

ஒவ்வொரு காலையும் மாலையும் 15 மணித்துளிகளை சுயசோதனை செய்வதற்கு ஒதுக்குங்கள். காலையில் 10 நிமிடங்கள் அமைதியாக இருங்கள். மீதி 5 நிமிடங்களில் அன்று செய்யவேண்டிய வேலைகளை அட்டவணைப் படுத்துங்கள். சாயங்காலம் 5 நிமிடங்கள் மனதை ஒருநிலைப் படுத்தி முழு அமைதியில் இருங்கள். பிறகு 10 நிமிடங்கள் அன்று செய்ய நினைத்தவைகளைப் பற்றி சிந்தியுங்கள்.

Image

உங்கள் மன சமநிலையிலிருந்து வழுவாதிருங்கள். குறுகிய எண்ணத்தையும் கோபத்தையும் தவிருங்கள். நண்பரே பண்பாடு தவறி முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் பழிவாங்க முயல வேண்டாம். அந்த சம்பவத்தை புறந்தள்ளி விட்டு அடுத்த நிலைக்கு நகருங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடைசி அழைப்பு வரும் போது அடுத்தவர் பற்றிய எந்தவிதக் கவலை அல்லது மனத்தாங்கல் இல்லாமல் போக வேண்டும். ஐயோ அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டேனே அவரிடம் என் செயலுக்காக மன்னிப்பு கேட்க வில்லையே என்று வேதனையோடு உயிர் மூச்சை விட வேண்டுமா என்ன?

பெர்சியக் தத்துவக் கவிஞர்  அல்லாமா இக்பால் எழுதிய இருவரிக் கவிதையை இங்கே நினைவு கொள்ள விரும்புகிறேன்.

“நம்பிக்கையுள்ள மனிதனின் லட்சணங்களை என்னிடம் கேட்டால்….
சாவின் விளிம்பில் புன்னகையோடு நிற்பவனே அவன் என்பேன்…”

நம்மில் எத்தனை பேர் மரணத்தை மகிழ்ச்சியோடு எதிர் கொள்ள தயார்?

மூலம்: குஷ்வந்த் சிங். (http://kitaab.org/2014/03/21/how-to-live-die-khushwant-singhs-10-rules/)

அஞ்சி அஞ்சி வாழும் ஜப்பானிய முகமூடிகள்

ஜப்பான் அலுவலகத்திலும் ஏன் பொது இடங்களிலும் புதிதாக வரும் அயல் நாட்டவருக்கு, நாம் அறுவை சிகிச்சை கூடத்திற்கு வந்துவிட்டோமோ என்று ஐயம் வரக் கூடும். வயது வித்தியாசம் இல்லாமல் ஆண்களும் பெண்களும் சர்ஜிகல் மாஸ்க் அணிந்து வருவதை ரயில் நிலையமோ, பார்க்கோ எங்கும் காணலாம்.  ஏனிப்படி?

ImageImage

Image

ஜப்பானியர்கள் உழைப்பாளிகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் உழைப்பதில் அவர்கள் திறமைசாலிகள். நம் ஊரில் பாட்டி செத்ததை காரணம் காட்டியே வருடம் தோறும் இரண்டு மூன்று நாள் சிலர் லீவ் தேத்தி விடுவார்கள்.

வியாதிப்பட்டு விட்டால் அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கோ மட்டம் போட வேண்டியிருக்குமே என்ற பயத்தினால் தான் என்று பலரும் கூறினாலும் அது மட்டுமே காரணமில்லை.

சில ஊடக கருத்துக் கணிப்புகள் ஜப்பானியர்கள் முகமூடி அணிவது hygiene கவலையினால் மட்டுமல்ல என்பதை புலப்படுத்தியிருக்கிறது.

2003க்கு முன்னால் வரை நோயுற்றோர்தான் முகமூடி அணிந்து பணியிடத்திற்கு வந்து கொண்டிருந்தனர். நோயின் காரணத்தால் வேலை பார்க்கப் போகாமல் இருக்கவும் மனமில்லாமல் அதே நேரம் தங்கள் மூலம் மற்றவருக்குத் தொற்று நேர்ந்து விடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தான் முகமூடி அணியத் தொடங்கினர்.
பின்னர் ஹே பிவர் (allergic rhinitis) பயத்தில் கூட பலரும் முகமூடி அணிந்தனர். குளிர் காய்ச்சல் எப்படி வைரஸ் மூலம் பரவுகிறதோ அதே போல ஹே பிவர் காற்றில் மிதக்கும் நுண்ணிய துகள்களினால் ஏற்படும் அலர்ஜியினால் வருகிறது. பெரும் பாலும் பூ பூக்கும் காலங்களில் மகரந்தத் தூள்கள் காற்றில் பரவுவதால் அதை நுகரும் நமக்கு இந்த ஹே பிவர் வரலாம்.

H1N1 ஃப்ளு பரவிய காலத்தில் உலகம் முழுவதும் ஜப்பானியர்களின் முகமூடி தற்காப்புக் கலை பின்பற்றப் பட்டது.
Image
இப்போது எந்தப் பீதியும் இல்லை. இருந்தாலும் ஜப்பானியர்கள் முகமூடியுடன் அலைவதைக் காணலாம். ஏன்? பழக்கதோசமா?

பெரும்பாலான கல்லூரி மாணவிகள் மற்றவர்களின் அன்புத் தொல்லையிலிருந்து தப்பிக்க மாஸ்க் உபயோகிக்கிறார்களாம். ஹெட்போன் மற்றும் மாஸ்க்குடன் அலையும் பெண்களிடம் பேச்சைத் தொடங்குவது சற்று சிரமம் தானே. மேலும் ஒருவரைப் பார்க்கும் போது சிரிக்கவோ அல்லது முறைக்கவோ வேண்டிய நிர்ப்பந்தத்தை மாஸ்க் கொடுப்பதில்லை. இந்தக் கால இளைஞர்கள் முகமுகமாய் பேசுவதை விட போனிலோ அல்லது சமுக வலைத்தளம் மூலமாகவோ தகவல் பரிமாறிக் கொள்ளவோ தானே விரும்புகிறார்கள்!

இன்னும் சிலர் குளிர் காலத்தில் முகத்தைத் தாக்கும் குளிரிலிருந்து தப்பிக்கவும் முகமூடியை உபயோகிக்கிறார்களாம். உடலில் கை, கால், தலை என்று எல்லா பாகத்தையும் தேவையான குளிர் கால உடை மூலம் மறைத்து விடலாம். ஆனால் முகத்தை எப்படி மறைத்துக் கொண்டு பிறர் மீது முட்டாமல் நடப்பது? ஏற்கனவே முகமூடி பழக்கம் உள்ளதால், வித்தியாசமாகத் தோணாது என்று மற்ற நேரத்தில் முகமூடி அணியாதவர்கள் கூட குளிர் காலத்தில் முகத்தைக் கதகதப்பாக வைத்துக் கொள்ள முகமூடி போடுகிறார்களாம்.

தங்கள் அழகு குறித்த இன்பீரியாரிடி கொண்ட பெண்கள் கூட மேக்கப் போடாத நேரங்களில் மாஸ்க் போடுகிறார்களாம். உண்மை முகத்தை வெளிக் காட்டிக் கொள்ளப் பயந்து. சில சோம்பேறிப் பெண்கள் ஒப்பனைகளுக்கு அரை மணியாவது பிடிக்குமே, நேரமில்லையே என்று உணரும்போது முகமூடியைத்தான் தேடுகிறார்கள். ஒரு நிமிடத்தில் மேக்கப் ரெடியாகி விட்டதல்லாவா?

மாஸ்க்கை ஒரு அழகுப் பொருளாக உபயோகிப்போரும் உள்ளனர். ஸ்டைலால டிசைன் செய்யப் பட்ட மாஸ்க்குகள் மால்களில் விற்பனைக்கு வருவதே இதற்கு சாட்சி.
Image
எப்படி இருந்தாலும் மாஸ்க் அணிவதால் சில நன்மைகள் இருக்கத் தான் செய்கிறது என்று ஜப்பானியர்கள் மூலம் அறிய வருகிறோம்.

(1) தொற்று நோய் எளிதில் வராது.
(2) தன்னிடம் இருக்கும் நோய் அடுத்தவர்களைப் பாதிக்காது.
(3) குளிர் பிரதேசத்தில் முகத்தைக் குளிர் காற்றிலிருந்து மறைக்க உதவும்.
(4) தேவையில்லாத தொடர்புகளை தவிர்க்கலாம்.
(5) மேக்கப்புக்கு ஆகும் செலவைக் கூட குறைக்கலாம்.

எங்க சர்ஜிகல் மாஸ்க் வாங்கப் போறீங்களா? எல்லாம் சரிதான் நம்மூரில், ‘ஆஸ்பத்திரியிலருந்து மாஸ்க்கக் கூட களத்தாம ஞாபக மறதியில வந்துட்டீங்களான்னு’ கேட்டுப் புடுவாங்க பாத்துக்குங்க…

முகநூல் கதைகள் – 2: நீதானா அவன்

நீதானா அவன்

ஜமிலா லைப்ரரியிலிருந்து, அந்த ஒரே ஓர் புத்தகத்தையும் எனக்கு முன்பாக எடுத்துச் சென்று விடுவாள் என்று நான் ட்வீட்டர் ஸ்டேடஸ் அளவேனும் நினைத்திருக்கவில்லை. ராமதாஸ் மட்டும் தான் என்னோடு போட்டி போடுவான் என்று கணித்திருந்தேன், ஆனால் இவளுமா? எப்போதுமே கடைசி நாள் வரை படிக்காமல் பாடங்களை சேமித்து வைப்பதில் நானும் ராமதாசும் தான் கெட்டி. மதியம் பார்த்தபோது இருந்தது. ராமதாஸ் கிளாஸ்க்கு வரவில்லை என்பதால் சாயங்காலம் எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன்.

நாளைக்கு எக்ஸாம். இன்று இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தால்தான் ஜஸ்ட் பாஸ் பண்ண முடியும்.

வாத்தியார் வேறு மிரட்டியிருந்தார். ‘கிரேஸ் மார்க்கெல்லாம் எதிர்பார்க்காதிங்க.. கோட்ட தாண்டாதவிங்க கண்டிப்பா பெயில் தான்.’

மூன்றாவது ஆண்டு, செகண்ட் செமஸ்டர். பேக் இல்லாமல் அனைத்தையும் கிளியர் பண்ணியிருக்க வேண்டும் இல்லையென்றால் பிளேஸ்மென்ட் வாய்ப்பு கிடைக்காது.

என்ன செய்யலாம்.

எங்காவது புத்தகக் கடையில் வாங்கலாம் என்றால், அது இம்போர்டட் புக், ஸ்டாக் இருக்குமா என்பது சந்தேகமே.

நண்பர்களிடம் நோட்ஸ் வாங்கி செராக்ஸ் எடுக்கலாம் என்றால், ஒருவனும் வளைந்து கொடுக்க மாட்டான். எல்லாருக்கும் எக்ஸாம் டென்சன்.

முழு புத்தகத்தையும் இனி செராக்ஸ் எடுக்கும் நேரத்தில் படித்துத் தொலைத்து விடலாம். ஜமிலாவிடம் கேட்டு விட வேண்டியதுதான். ஓரக் கண்ணால் எத்தனையோ தடவை நோட்டமிட்டிருக்கிறேன். சிநேகமாகச் சிரித்து விட்டு தலை கவிழ்ந்து கொள்வாள். நிச்சயம் உதவுவாள்.

அவளும் படிக்கவில்லை என்று தர மறுத்தால், குருப் ஸ்டடி? ஹாஸ்டல் வார்டன் நோண்டி விடுவாள். எதையாவது செய்து, காலில் விழுந்தாவது வாங்கி வந்து விட வேண்டும்.

எட்டு மணிக்கு மேல் கர்ள்ஸ் ஹாஸ்டலில் நுழைய எங்களுக்கு அனுமதியில்லை.

இன்னும் 12 நிமிடங்கள் தான் இருக்கின்றன.

ஓட்டமும் நடையுமாக, வாசலில் வழிமறித்த செக்யூரிட்டியிடம் ஐடியைக் காண்பித்து விட்டு வலக்கைப் பக்கம் இருந்த பி-பிளாக்கைத் தாண்டி C-103 ரூம் கதவை டொக்கினேன்.

ஜமிலா கதவைத் திறந்தாள்.

பின்னால் ராமதாஸ் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் அந்த புக்.

ஜமிலா, ‘இந்த புக்குக்குத் தானே வந்தாய்…’ என்று இளக்காரமாய்ப் பார்ப்பது போல் இருந்தது.

முகநூல் கதைகள் – 4: பல்லி

Image

ஜமிலாவிற்குப் பல்லியைப் பிடிக்காது.

பல்லியின் முகம் விகாரமானதுதான். அசிட் ஊற்றி அழிக்கப்பட்ட முகம் என்று கூடச் சொல்ல முடியாது. ஆனால், ஒரு காண சகிக்காத தோற்றம். ஆப்பாயிலில் கூட ஓர் அழகு இருக்கும், மஞ்சள் பொட்டைச் சுற்றி வெள்ளுடை பரவிக் கிடப்பதைப் போல. அதையே கரண்டியால் கிண்டினால் காண சகிக்காது. ஜமிலாவிற்கு அப்படித்தான் பல்லியின் தோற்றம் மனதில் அறைந்தது.

பல பெண்கள் கரப்பான் பூச்சிக்குக் கூடப் பயப்படுவார்களாம். ஜமிலாவிற்குக் கரப்பான் பூச்சியெல்லாம் பெரிய விஷயமில்லை. விரலால் தூக்கிக் காலால் நசுக்குவாள்.

குலைக்கும், கடிக்கும்  நாய்களைக் கண்டாலும் இவள் கைகளில் வியர்க்காது. கல்லால் அடித்து விரட்டிவிடுவாள்.

குரங்கைக் கண்டால் மட்டும் பெரிதாய் சிரித்து விட்டு பிறகு இரண்டு ஸ்டெப் பின்னால் போவாள். சிறு வயதில் குற்றாலம் சென்றிருந்த போது குரங்கு ஒன்று ஜமிலா கையிலிருந்த வாழைப்பழத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டது. அது பிடுங்க வந்த வேகத்தில் இவளுக்கு யூரினே கசிந்து விட்டது.

பிடிக்காது என்று தெரிந்தும் சட்டென்று முன்னால் வந்து நின்று பயமுறுத்துவது பல்லியின் வழக்கம்.

கிச்செனில், டாய்லெட்டில்,  பெட் ரூமில், ஸ்டோர் ரூமில் என்று எங்கு நுழைந்தாலும் தொடர்ந்து வந்து பல்லி தருவது இம்சை. சில நேரங்களில் பல்லியைப் பார்த்து ஜமிலா, ரிப்போர்ட் கொடுக்க வேண்டிய நாளில் ஹார்ட் டிஸ்க் பெயிலானால் ப்ராஜக்ட் லீடர் ஊளையிடுவாறே அப்படிக் கத்துவாள். வீடே அதகளப் படும்.

பல்லியைக் குறை சொல்ல முடியாது. ஜமிலாவைப் பயமுறுத்துகிறோம் என்று ஒதுங்கிச் செல்லும் ஞானம் கொண்டிருக்க வில்லை. இவள் ஏன் இப்படிப் பண்ணுகிறாள், என்று யோசிக்கும் பக்குவமும் இல்லை. ஒரு வேளை போகப் போக எல்லாம் சரியாகி விடும் என்று கருதியிருக்கலாம்.

பல்லி ஊர்ந்து வருவது ஜமிலாவுக்கு என்னமோ போலிருக்கும்.

அமுதவல்லியும் எவ்வளவோ எடுத்துக் கூறிப் பார்த்து விட்டாள். ஜமிலா மனது பக்குவப்படுவதாய்த்  தெரியவில்லை.

‘ஜமிலா நீ இப்படிப் பண்ணுவது சரியில்லை. கொஞ்சம் பல் உயர்ந்து இருக்கிறது என்பதற்காக அத்தை பொண்ணுன்னும் பார்க்காம பல்லின்னு கேலி பண்ணுறது சரியில்லை…ஏன் அவளக் கண்டா பேயப் பாத்தா மாதிரி அரளுதே’

முகநூல் கதைகள் – 3: பஞ்சு மிட்டாய் பாட்டி

‘பஞ்சு மிட்டாய் பாட்டி போய் விட்டாளா?’ சமையல் கட்டிலிருந்து வாசலை நோக்கிக் கத்தினாள் அமுதவல்லி.

ஸ்கூலில் படிக்கும் ஜமிலாவிற்குச் சாப்பாடு கொண்டு கொடுக்க வேண்டும். தினமும் பஞ்சு மிட்டாய் பாட்டி சாப்பிடக் கிளம்பிய பிறகு தான் அமுதவல்லி சாப்பாடு எடுத்துக் கொண்டு போவாள். பஞ்சு மிட்டாய் கிழவி மூஞ்சில் விழித்து விட்டுப் போனால் ஜமிலாவிற்குச் சாப்பாடு செரிக்காது என்ற நம்பிக்கை.

அமுதவல்லி தூக்குச் சட்டியுடன் வருவதைக் கண்டாலே, பஞ்சுமிட்டாய் பாட்டி சப்பு கொட்டிக் கொண்டு கேட்பாள், ‘என்ன சாப்பாடு இன்னிக்கு? கறியா மீனா?”

இவள் திபாவளிக்கோ பொங்கலுக்கோதான் கறிக் குழம்பு சாப்பிடுவாளாயிருக்கும்.

மூச்சாலேயே சாப்பாட்டை எச்சில் படுத்திவிடுவாள் என்ற பயம். கொரி விழுந்து விடும் என்ற அச்சம்.

இரண்டு மூன்று தடவை இவளை எதிர்த்துக் கொண்டுபோன சாப்பாட்டைச் சாப்பிட்டு ஜமிலாவிற்கு வயிறு வலி வந்துவிட்டது. அதனால் தான் இந்த முன் ஜாக்கிரதை.

‘ம் போய்ட்டா’
கிரீன் சிக்னல் கிடைத்ததும். சாப்பாட்டைத் தூக்கில் அடைத்துக் கொண்டு வேக வேகமாகப் புறப்பட்டாள்.

ஸ்கூல் வாசலிலேயே ஜமிலா காத்திருந்தாள்.

‘அம்மா எத்தின தடவ சொல்லுறது. கொஞ்சம் செத்த முன்னாடி கொண்டு வந்தா கொறைஞ்சா போயிடுவே…’

‘எதுக்குப் புள்ளே அலுத்துக்கிறே, என்ன அவசரம்?’

‘இவ்வளவு நேரம் காத்திருந்திட்டு இப்பதான் பஞ்சு மிட்டாய் பாட்டி போறா…’

‘பாட்டி போனதப் பாத்துதானே வர்றேன்.’, அமுதவல்லி மனதிற்குள் மகிழ்ந்தாள்.

ஜமிலாவோ இன்று வாங்கிய பஞ்சு மிட்டாய் கடனை நாளைக்குத்தான் சாப்பாடு கொடுத்து அடைக்க முடியும் என்று யோசித்தபடியே டிபன் பாக்சை வாங்கிக் கொண்டு திரும்பி நடந்தாள்.

முகநூல் கதைகள் -1 : ஜமிலா, ஐ லவ் யு

ஜமிலா, ஐ லவ் யுஜமீலா ஜமீலா என்றொரு பெண்ணிருந்தாள் எங்கள் தெருவில்.

அவளுக்கு அப்பா கிடையாது.

இறந்து விட்டாரா அல்லது ஓடி விட்டாரா என்று தெரியாது.

அடிக்கடி என்னிடம் படிக்கக் கதைப் புத்தகங்கள் கேட்பாள்.

என் தெருவில் குழந்தை முதல் பாட்டி வரை அனைவருக்கும் நூலகம் நான் தான்.

வாங்கிச் சென்ற புத்தகங்களை அரை மணி நேரத்திற்குள் திருப்பித் தந்து விடுவாள்.

அவ்வளவு வேகம். படிப்பதில் அல்ல.

புத்தகத்தைத் திறந்தால், எங்கேயாவது ஒருப் பக்கத்தில், ‘ஐ லவ் யு – ஜமிலா’ என்றிருக்கும்.

…ம் என்னையும் ஒரு பிள்ளை லுக் விடுதுப்பா என்று கண்ணாடி முன் கண் சிமிட்டிக் கொள்வேன்.

கொஞ்ச நாளாய்ப் புத்தகம் வாங்க ஜமிலா வரவில்லை.

என்னவென்று விசாரிக்க நண்பன் ராமராஜைத் தேடினேன். அவனையும் காணவில்லை.

குமார் சொன்னான், ஜமிலாவும் ராமராஜும் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக் கொண்டார்களாம்.

ஜமிலா கடைசியாக வாசித்துவிட்டுத் திருப்பித் தந்த ராணி முத்துவை ஏக்கத்தோடு புரட்டினேன்.

‘ஐ லவ் யு – ஜமிலா’ என்று எழுதியிருந்த பக்கத்திலிருந்து கண் நகர மறுத்தது. அந்தப் பக்கத்தில், ‘ராமராஜ் வேஷ்டிகள்’ விளம்பரம் இருந்தது.